சுடச்சுட விற்பனையான ரூ. 7 கோடி அபார்ட்மெண்ட்: ஆயிரம் வீடுகளுக்கு மூவாயிரம் பேர் போட்டி! - துளிர்கல்வி

Latest

Wednesday, 8 March 2023

சுடச்சுட விற்பனையான ரூ. 7 கோடி அபார்ட்மெண்ட்: ஆயிரம் வீடுகளுக்கு மூவாயிரம் பேர் போட்டி!

சுடச்சுட விற்பனையான ரூ. 7 கோடி அபார்ட்மெண்ட்: ஆயிரம் வீடுகளுக்கு மூவாயிரம் பேர் போட்டி! து தில்லி: நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் புதுப் பணக்காரர்களால், ஆடம்பர பங்களாக்களின் தேவை மற்றும் விற்பனை அதிகரித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

 ஒரு பக்கம் கட்டுமான நிறுவனமான டிஎல்எஃப் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வீடுகளை வெறும் 5 நாள்களில் விற்றுத் தீர்க்கிறது. மறுபக்கம் கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள குடியிருப்புகளை குறிப்பிட்ட அழைப்பின்பேரில் சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது இவ்விரண்டு செய்திகளுமே ஒன்றைத்தான் மேற்கோள்காட்டுகின்றன. அதாவது ஆடம்பர பங்களாக்களின் தேவை அதிகரித்திருக்கிறது என்பதே அது. அதாவது ஆடம்பர பங்களா என்பது வெறும் கட்டமைப்பு மட்டுமல்ல, கூடுதலாக ஸ்பாக்கள், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், பசுமையான திறந்தவெளி, சுடுநீர் இருக்கும் நீச்சல் குளம் ஆகியவை இதனுள் அடங்குகிறது. அழைப்பின் பேரில் பல சேவைகள் உடனுக்குடன் கிடைப்பதும்கூட. தற்போது வரை தனிப்பட்ட மற்றும் பழைய குடியிருப்புகளில் இதுபோன்ற வசதிகள் அனைத்தும் இருப்பதற்கில்லை. 

அது மட்டுமல்லாமல் நாட்டின் முக்கிய மற்றும் நெருக்கமான நகரங்களில் சாத்தியமில்லாததும்கூட. இப்படி ஆடம்பர பங்களாக்களின் தேவை அதிகரிக்கக் காரணம் கரோனா பேரிடர் என்கிறார்கள் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள். வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டவர்கள், தங்கள் வீட்டை ஆடம்பர பங்களாவாக கட்டமைக்க விரும்புகிறார்கள். நல்ல ஊதியம் பெற்று புதிய பணக்காரர்களாக வலம் வருவோர், வாங்கும் புதிய வீட்டில் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் டிஎல்எஃப் குருகிராமில் தொடங்க இருந்த அடுக்குமாடி குடியிருப்பு தலா ஒன்று ரூ.7 கோடி மதிப்பு. 1,137 குடியிருப்புகள், இதற்கு சுமார் மூன்று ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 

இந்தப் பகுதியிலேயே இவ்வளவு விலை அதிகமான குடியிருப்புகள் இதற்கு முன் கட்டப்பட்டதில்லை என்பதும், இந்த குடியிருப்புக்காக ரேஷன் கடைகளில் காணப்படுவதைப் போல நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்ததும் பேசுபொருளானது. இதற்கு முன்பெல்லாம் இப்படி ஆடம்பர பங்களாக்களுக்கு எல்லாம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த கதைகளை கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை. மும்பையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட சொத்துகளின் சராசரி மதிப்பு ரூ.1.9 கோடி. இது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட சொத்துகளின் சராசரி மதிப்பைக் காட்டிலும் 65 சதவிகிதம் அதிகமாகும். 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதாரம் மெல்ல மீண்டு வந்தாலும், கட்டுமானத் துறையில் தற்போது மிகப்பெரிய புரட்சியே உருவாகிக் கொண்டிருக்கிறது என்று இதுபோன்ற தகவல்களால் கருதப்பட நேர்கிறது. 

அதாவது 2019ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆடம்பர பங்களாக்கள் விற்பனையாகின என்றால், கடந்த 2022ல் மட்டும் இது 66 ஆயிரம் என்ற கணக்கில் இருக்கிறது. அதிக வசதிகள் கொண்ட ஆடம்பர பங்களாக்கள் மிக விரைவாக விற்றுத் தீர்வதாகவும், கூடுதல் சேவைகள் ஏற ஏற அதன் மதிப்பு இரட்டிப்பாவதாகவும் கட்டுமான நிறுவனங்கள் கணித்து வைத்திருக்கின்றன. ஏற்கனவே ஒரு குடியிருப்பில் வசிக்கும் நபர்களும், நல்ல வசதியாக குடியிருப்புகளை வாங்க அல்லது வாடகைக்குச் செல்ல விரும்புகிறார்கள். இதனால் ஆடம்பர பங்களாக்களின் தேவை எல்லா வகையிலும் அதிகரித்தே வருகிறது. ஆடம்பர குடியிருப்புகளுக்கு கொண்டாட்டம் என்றால், ஆடம்பர கார்களின் விற்பனையும் கடந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கார்களுடன், மிக விலை உயர்ந்த கடிகாரங்கள், கைப்பைகள் ஆகியவற்றின் விற்பனையும் கணிசமாக உயர்ந்தே வருகிறது. 

 தேவையை சமாளிக்கும் வகையில் கட்டுமான நிறுவனங்களும் பல ஆடம்பர நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. வீடுகளை அறிமுகப்படுத்த நட்சத்திர விடுதிகளில் 3டி விடியோக்களைப் போட்டுக் காட்டியும், ஆவணங்களை சரிபார்க்கும் நிகழ்ச்சிகளுக்கு நட்சத்திர விடுதியில் உணவுகளுடன் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தியும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன. இதெல்லாம் கடந்த காலங்களில் கட்டுமான நிறுவனங்களில் பார்த்திராக காட்சிகளாகவே கருதப்படுகின்றன. இதில் இரட்டை இலக்க குடியிருப்புகளுக்கு மூன்று இலக்கத்தில் அழைப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த குடியிருப்புகளும் விற்பனை செய்யப்பட்டு கட்டுமான நிறுவனங்கள் கைமேல் பலன் பார்ப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment