நாளை சர்வதேச தொழிலாளர் தினம் - தலைவர்கள் வாழ்த்து

உலகம் முழுவதும் நாளை (மே 1) தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தொழிலாளர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): "உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள். உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் மே தின நாளாகும்" என்று கூறியுள்ளார். கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்): "அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவு கட்ட, சமத்துவச் சமூகத்தை உருவாக்கிட மே தினத்தில் உறுதியேற்போம். 

சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமைப்பாட்டை வளர்த்தெடுப்போம். தொழிலாளர்கள் உரிமையைப் பாதுகாக்க தொய்வின்றி போராடுவோம். மாநில உரிமைகளை, கூட்டாட்சியைப் பாதுகாப்போம், இந்தியாவில் பன்முக பண்பாட்டை உறுதிசெய்வோம். பரந்துப்பட்ட உழைக்கும் மக்கள் ஒற்றுமையைக் கட்டி வளர்ப்போம். நூறாண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலர் உயர்த்திப்பிடித்த மே தின கொடியை கம்பீரமாகப் பிடித்துக் களமாடுவோம்" என்று தெரிவித்துள்ளார். முத்தரசன் (சிபிஐ): "தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023 ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை. தமிழக தொழிலாளி வர்க்கமும், ஜனநாயக சக்திகளும் எடுத்துக் கூறி களம் இறங்கின. ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் திருத்த சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. 

அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவோம். வகுப்புவாத, மதவெறி பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவும் மே தின நாளில் சூளுரை ஏற்று, களப்பணி தொடர்வோம்" என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.