ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வெற்றியால் அவரைப் பின்பற்றி ஹரியாணா மாநிலத்தில் ஏராளமான வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் எதிர்கால சாம்பியன்களாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டியிலும், உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளவர் ஹரியாணாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் போட்டியில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற 2 இந்திய வீரர்களில் ஒருவர் நீரஜ் சோப்ரா.
மற்றொருவர் 2008-ம் ஆண்டு துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா.ற்போது ஈட்டி எறிதலில் சாதனை மேல்சாதனையாகப் படைத்து வரும் நீரஜ்சோப்ராவைப் பார்த்து அவரது கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஈட்டி எறிதல் விளையாட்டில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த எதிர்கால சாம்பியன்களுக்குத் தேவையான கருவிகளை நீரஜ்சோப்ரா வழங்கி வருவதோடு அவர்களுக்கு உத்வேகமும் அளித்து வருகிறார்.நீரஜ் சோப்ராவின் ஊரைச் சேர்ந்தவர் முன்னாள் தடகள வீரர் ஹரீந்தர் குமார். இவர் டெகத்லான் போட்டிகளில் பங்கேற்று பெருமை சேர்த்தவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீரஜ் சோப்ராவுடன் பழகியுள்ளார். இவர்தான் பஞ்ச்குலா பகுதியில் 2012 முதல் 2015-ம் ஆண்டு வரை பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு தடகளப் பயிற்சியை அளித்து வந்தவர். இங்குள்ள சன்ஸ்கிருதி பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கு 2019 முதல் 2020 வரை தடகளப் பயிற்சியை அளித்தார்.
தற்போது காந்த்ரா பகுதியில் சுமார் 45 பேருக்கு தடகளப் பயிற்சியை அளித்து வருகிறார் ஹரீந்தர் குமார்.காந்த்ரா பகுதியில் நீரஜ் சோப்ராவைப் பார்த்து பல வீரர், வீராங்கனைகள் ஈட்டி எறிதல் விளையாட்டைத் தொடங்கியுள்ளனர். ஃபின்லாந்து நாட்டின் பாங்கோவன் பகுதியை ஈட்டி எறிதல் விளையாட்டுக்கு புகழ்பெற்றது என்று கூறுவர். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பேர் ஈட்டி எறிதலில் புகழ் பெற்று விளங்கியுள்ளனர். அதைப் போலவே தற்போது ஹரியாணாவின் பஞ்ச்குலா, காந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர்களும் ஈட்டி எறிதலில் நிபுணத்துவம் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து ஹரீந்தர் குமார் கூறும்போது, ‘‘இங்குள்ள எதிர்கால சாம்பியன்களுக்கு உத்வேகமாக இருக்கிறார் நீரஜ்சோப்ரா.
அவர் வெளிநாடு சென்று தனதுகிராமத்துக்கு வரும்போது இங்குள்ள வீரர்,வீராங்கனைகளுக்குத் தேவையான விளையாட்டு கருவிகள், உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி வந்து தருவார். எதிர்கால விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாகவும், உத்வேகமாகவும் நீரஜ் சோப்ரா உள்ளார்’’ என்றார்.
காந்த்ரா மிகவும் சிறிய நகரமாக இருந்தாலும் எதிர்காலத்தில் இங்கிருந்து ஏராளமான சாம்பியன்கள் உருவாவது நிச்சயம் என்கிறார் பயிற்சியாளர் ஹரீந்தர் குமார். அந்த சாதனை நடந்தால் அதற்கான முழு காரணமும் நீரஜ் சோப்ராதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
No comments:
Post a Comment