பருவம் தவறி பெய்த கனமழையினால் டெல்டா மாவட்டங்களில்
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழுகி சேதம்!
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம்
நிவாரணம் வழங்கிட தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!
காவிரி டெல்டா மாவட்டங்களில், நேற்று பருவம் தவறி பெய்த கனமழையின்
காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி
அழுகிப்போயுள்ளது.
குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய
மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும்,
ஊடுபயிராக பயிரிடப்பட்ட உளுந்து, பாசி பயிர்களும் நீரில் மூழ்கி சேதம்
அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த
வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசு, மழை வெள்ள பாதிப்படைந்த பகுதிகளை
உடனடியாக பார்வையிட்டு கணக்கிடுவதுடன், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு
ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், பிற பயிர்களுக்கு அதன் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு
தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வலியுறுத்துகிறது.
மேலும், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் 17 சதம் ஈரப்பதம்
இருந்தால் எடுப்பது என்ற வழக்கத்தை மாற்றி 22 சதம் வரை உயர்த்தி
நெல்கொள்முதல் செய்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழக அரசை வலியுறுத்துகிறது.