மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 78-வது நினைவு
நாளையொட்டி நாள்:29.01.2025 அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி
மரியாதை செலுத்துகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
அவர்கள், உத்தமர் காந்தியடிகளின் 78-வது நினைவு நாளை முன்னிட்டு. 30.1.2025 அன்று
காலை 10.30 மணியளவில் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள
அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
உத்தமர் காந்தியடிகள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் குஜராத் மாநிலம்
போர்பந்தரில் பிறந்தார். 18 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து, இங்கிலாந்தில் சட்டப்
படிப்பு பயின்றார். கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோரின் நண்பராகத்
திகழ்ந்த உத்தமர் காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து,
ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் தொடர்ச்சியாக,
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக உத்தமர் காந்தியடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவில், இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி
விதித்ததைக் கண்டித்து அகமதாபாத்திலிருந்து குஜராத் மாநிலத்திலுள்ள தண்டி கடற்கரை
நோக்கி நீண்ட நடை பயணத்தைத் தொடர்ந்தார்.
தண்டி கடற்கரை வந்து சேர்ந்த பின்பு
உப்பைத் தயாரித்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராக பகிரங்கமாக பொது மக்களுக்கு உப்பை
விநியோகம் செய்தார். இந்நிகழ்வு "உப்பு சத்தியாகிரகம்" என்று வரலாற்றில்
போற்றப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமாக "வெள்ளையனே வெளியேறு"
போராட்டத்தில் உத்தமர் காந்தியடிகள் பங்கேற்றுப் பெரும் பங்கு வகித்தார்.
தமிழ்நாடு அரசால் உத்தமர் காந்தியடிகளின்
தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை, கிண்டி மற்றும்
கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. உத்தமர் காந்தியடிகளின்
புகழுக்கு, பெருமை சேர்க்கும் வகையில் 15.8.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, எழும்பூர், அரசு
அருங்காட்சியகத்தில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச்சிலையை நிறுவி
திறந்துவைத்தார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உத்தமர் காந்தியடிகளின் 78-வது நினைவு நாளை
முன்னிட்டு, 30.1.2025 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை, எழும்பூர், அரசு
அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்
தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர்,
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர்
அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.