மொழிப்போர் தியாகிகள் திருவாளர்கள் தாளமுத்து -
நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறந்து வைப்பு - "சென்னை,
எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை
நிறுவப்படும்" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று
(25.1.2025) தமிழ்மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, மூலக்கொத்தளத்தில்
அமைந்துள்ள மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று
உயிர்துறந்த திருவாளர்கள் தாளமுத்து - நடராசன் ஆகியோரின் நினைவிடம் 34 இலட்சம்
ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைத்தார்.
தமிழ் மொழி, நீராலும்
நெருப்பாலும், வஞ்சகர்களின் வெறுப்பாலும் வெல்லமுடியாத வீழ்த்த முடியாத செம்மாந்த
மொழியாகும்! தத்தமது உரைநடையின் வாயிலாகவும், கவிதைத் தீரமுடனும் தமிழறிஞர்கள் பலர்
தங்கள் விழியெனப் போற்றி வளர்த்த வண்டமிழ் மொழியாகும்.
1938ஆம் ஆண்டு மதராஸ்
மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சரான மூதறிஞர் இராஜாஜி அவர்கள், தமிழ்நாட்டு
மாணவர்கள் இனி இந்தி கட்டாயமாக கற்க வேண்டுமென்று வெளியிட்ட அறிவிப்பினை எதிர்த்து,
27.02.1938 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில்,
தாய்மொழியை காக்க இந்தி திணிப்பினை எதிர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு
அதனடிப்படையில், தந்தை பெரியார், மறைமலை அடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர
பாரதி, பேரறிஞர் அண்ணா போன்ற தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தாய்மொழி
காக்க களம் கண்டனர்.
அப்போது, 14 வயதே ஆன பள்ளி மாணவர் முத்தமிழறிஞர் கலைஞர்
அவர்கள், திருவாரூர் வீதியில் தன்னுடன் பயிலும் மாணவர்களை அணி திரட்டி, "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள
நாடிதல்லவே!" என்று, இந்தித் திணிப்பு எதிர்ப்பு போர்ப்பரணி பாடி, தமிழ்மொழி
காக்கும் போர் வீரராய் முன்வந்தார்.
அன்னைத் தமிழ் காக்க, முதற்கட்ட இந்தி திணிப்பு
எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்ற நடராசன் 15.01.1939 அன்றும்:
தாளமுத்து 11.03.1939 அன்றும் வீர மரணம் அடைந்தனர். தமிழக மக்களின் தொடர்
போராட்டத்தினால், அரசு 21.02.1940ல் கட்டாய இந்தி திணிப்பை கைவிடும் முடிவுக்கு
வந்தது. தாராளமாகவும் ஏராளமாகவும் தமிழ்ச் சொற்கள் இருந்தும், பிறமொழிச் சொல்
கலந்து பேசியும், எழுதியும் தமிழுக்கு ஊறு விளைத்திட முனைந்தோரால், முடிந்தளவு
முயன்றும், யாதொன்றும் புரிந்திட இயலாது, என்று முடங்கிடும் நிலையில் என்றென்றும்
மாறாத இனிமைத் தமிழுக்கு ஆபத்து வரத்துணிந்த போது, "செந்தமிழுக்கு இருந்தென்ன
லாபம்?" தீங்கொன்று வந்துற்ற பின்னும் இத்தேகம் என, தனக்குத் தானே கேள்வி எழுப்பிக்
கொண்ட அன்னைத் தமிழின் அருந்தவப் புதல்வர்களாம் கீழுப் பழூவூர் சின்னச்சாமி,
விருகம்பாக்கம் அரங்கநாதன்.
கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி.
விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, பீளமேடு தண்டபாணி, சத்தியமங்கலம் முத்து,
அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் தீக்குளித்தும், துப்பாக்கியால் சுட்டுக்
கொல்லப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் உள்ளிட்ட
நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவு கூர்ந்திடும் நாள் தான் ஜனவரி 25ஆம் நாள்
ஆகும்.
இந்தியைத் திணிக்க முயன்றோருக்கும், முயல்வோருக்கும் அச்சத்தை
உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள தோழர்கள் நடராசன் தாளமுத்து ஆகிய இருவரின் தியாகத்தைப்
போற்றும் வண்ணம் சென்னை, மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியார் அவர்களால்
திறந்துவைக்கப்பட்ட நினைவிடம் தற்போது சிறப்பான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் மொழிப்போரின் வெற்றி
வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் தாளமுத்து
நடராசன் மற்றும் மொழிப்போர் தியாகி, சமூகப் போராளி டாக்டர். எஸ். தருமாம்பாள்
அம்மையார் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும், அவர்களின்
நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
மொழிப்போரின் வெற்றி
வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர் நீத்த திருவாளர்கள் தாளமுத்து
நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை
வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி
ஸ்டாலின், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.
சாமிநாதன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு,
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.
கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தாயகம் கவி, திரு. ஐட்ரீம் ஆர்.
மூர்த்தி, திரு.சி.வி.எம்.பி. எழிலரசன், திரு. எஸ்.சுதர்சனம், திரு.ஆர்.டி. சேகர்,
திரு.ஜே.ஜே.எபினேசர், திரு.கே.பி.சங்கர், துணை மேயர் திரு. மு. மகேஷ்குமார்,
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் திரு. ப. ரங்கநாதன், தமிழ்
வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு. வே. ராஜாராமன் இ.ஆ.ப., செய்தி
மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன்,இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித்
துறை இயக்குநர் முனைவர் ந. அருள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின்
பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்