திருநெல்வேலி மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (6.2.2025)
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
மு.க.ஸ்டாலின் அவர்கள். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற
நிகழ்ச்சிகளில், 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம்
அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை திறந்து வைத்து. 2574
கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம்
சோலார் நிறுவனம் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தி ஆலை அமைப்பதற்கு
அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்
எதிரே திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 11 கோடியே 57 இலட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து
மேம்படுத்தும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
செய்தார்.
அதன்படி, தாமிரபரணி ஆற்றின் கரையோரங்கள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப்
பணிகள் 11 கோடியே 57 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இச்சீரமைப்புப் பணிகளில், துருப்பிடிக்காத (Stainless Steel) கைப்பிடிகள், 3000
சதுர மீட்டருக்கு டைல்ஸ் பதிக்கும் பணிகள். சுவரோவியங்கள், 30 கல் இருக்கைகள். 28
வண்ண மின் விளக்குகள், நான்கு அழகிய நுழைவாயில்கள் போன்றவை அமைக்கும் பணிகள்
நடைபெற்று வருகின்றன. 90 சதவிகித பணிகள் நிறைவுற்ற நிலையில், எஞ்சிய பணிகளையும்
விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் கொண்டுவர வேண்டும் என்று
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சி ஆணையரிடம்
அறிவுறுத்தினார்.
மேலும், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் வழியாகப் பாய்ந்திடும் வைகை, காவிரி, தாமிரபரணி
மற்றும் நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகள் சீரமைக்கப்பட்டு, நதிநீரை தூய்மையாகப்
பராமரிக்கவும், கரையோரம் பசுமையான மரங்களுடன் கூடிய பூங்காக்கள், திறந்தவெளி
அரங்கம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு
மற்றும் கோயம்புத்தூரில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள்
மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க தாமிரபரணி
நதியின் மேம்பாட்டுப் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை விரைந்து தொடங்கிட மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்களிடம் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மாண்புமிகு
நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை
அமைச்சர் திரு. கே.என். நேரு. மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
திருமதி. பி. கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி. ராபார்ட் புரூஸ்,
சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எம். அப்துல் வகாப், திரு. ரூபி ஆர். மனோகரன், திரு.
நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் திரு. இரா. ஆவுடையப்பன்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.பி. கார்த்திகேயன். இ.ஆ.ப.,
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு. கோ. ராமகிருஷ்ணன். திருநெல்வேலி மாநகராட்சி
ஆணையர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.