தமிழ்நாட்டினை 2030-க்குள் கொத்தடிமைத்
தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என மாண்புமிகு தொழிலாளர் நலன்
மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சி.வெ. கணேசன் அவர்கள்
அறிவுறுத்தல்.
கொத்தடிமைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும்
தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், மாநில அளவிலான
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை, தி.நகரில்
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வெ.
கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழிலாளர் நலன்
மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை
ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து, கொத்தடிமைத்
தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள்
முன்னிலையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர்
அவர்கள் பேசியபோது, தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட நமது மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி கொத்தடிமை தொழிலாளர் முறையை
முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற சீரிய முயற்சியுடன். உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால், 24 மணி
நேரத்திற்குள் அவர்கள் மீட்கப்பட்டு, உடனடி நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
அவ்வகையில், இவ்வரசு பொறுப்பேற்றது முதல், 570 கொத்தடிமைத் தொழிலாளர்கள்
மீட்கப்பட்டு. உடனடி நிவாரணத் தொகையாக 1 கோடியே 89 இலட்சத்து 40 ஆயிரம்
வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு தண்டனையில் முடிவுற்ற பின்னர். மீட்கப்பட்ட
கொத்தடிமைத் தொழிலாளர்களில் ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.1.00 இலட்சம், பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு ரூ.2.00 இலட்சம் மற்றும் இதர சிறப்புப் பிரிவு தொழிலாளர்களுக்கு
ரூ.3.00 இலட்சம் இறுதி நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும் மீட்கப்பட்ட
கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், பல்வேறு
துறைகளின் வாயிலாக மறுவாழ்வு நடவடிக்கைகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு
வருகின்றன என்றும், 2030ம்ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத
மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நோக்கத்தினை
நிறைவேற்றும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மீட்கப்பட்ட கொத்தடிமைத்
தொழிலாளர்களின் குறு நாடகம் நடைபெற்றது.
2023-24ம் ஆண்டில் கொத்தடிமைத் தொழிலாளர்
முறை ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த சென்னை. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்)
திருமதி.ஜெயலட்சுமி, சேலம் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதர துணை
இயக்குநர் திருமதி. இலக்கியா, மற்றும் வருவாய் கோட்டாச்சியர் திருமதி.க்யூரி
மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. செல்வம் ஆகியோருக்கு மாண்புமிகு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் கேடயம் மற்றும்
பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., தொழிலாளர்
ஆணையர் திரு. சி.அ.ராமன். இ.ஆ.ப., காவல்துறை தலைவர் திருமதி கயல்விழி, இ.கா.ப.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு துணை செயலாளர் நீதிபதி திருமதி ச.
வேங்கடலட்சுமி, சென்னை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் / முதுநிலை சார்பு
நீதிபதி திரு. செந்தில் பாபு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் திரு.
செ. ஆனந்த், காவல் துறை துணை ஆணையர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான
குற்றப்பிரிவு) திருமதி ஜி.வனிதா கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை
ஆணையர்கள், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் தொடர்புடைய பிற துறை அலுவலர்கள்,
தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.