திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிறைவுப் போட்டியில் வெற்றி பெற்ற 37 மாவட்டங்களைச்
சேர்ந்த 333 மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாண்புமிகு
உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் வழங்கினார்.
இன்று
(17.2.2025) சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்
கோவி.செழியன் அவர்கள் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிறைவு போட்டியில் வெற்றி பெற்ற
37 மாவட்டங்களைச் சேர்ந்த 333 மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச்
சான்றிதழினை வழங்கி, கருணையடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கி மற்றும் வெளிநாடு
செல்ல தடையின்மைச் சான்று வழங்க இணையவழி நுழைவாயிலினை (Online Portal) தொடங்கி
வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித் துறை செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி,
இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித்துறை
அமைச்சர் அவர்கள் பேசியதாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் (31.12.2024) அன்று, முக்கடல் சூழும் குமரி
முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு வெள்ளி விழா, கொண்டாடப்பட்டது.
திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்ட மாணவ,
மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார்கள். அப்போது, மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள், தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும், திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி
விழா கொண்டாட்டத்தினை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் போட்டிகளை நடத்தி
பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்க ஆணையிட்டார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் ஆணைக்கிணங்க திருக்குறள் தொடர்பாக ஓவியம். ரீல், குறும்படம் என மூன்று
போட்டிகள் கல்லூரி மாணவ மாணவியருக்கு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன.
மீதமுள்ள 37 மாவட்டங்களில் வெற்றி பெற்ற 333 மாணாக்கர்கள், இந்தத் தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு அரங்கத்தில் பரிசுகளையும் சான்றிதழ்களையும்
அளிப்பதில் நான் பெருமைக் கொள்கிறேன். பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அய்யன்
திருவள்ளுவருக்கு குறளோவியம் எழுதிச் சிறப்புச் செய்தவர் டாக்டர் கலைஞர். வள்ளுவர்
கோட்டம் அமைத்து வரலாற்றில் திருவள்ளுவருக்கு அழியா மாபெரும் அடையாளச் சின்னம்
கண்டவர் அன்புத் தலைவர் நமது கலைஞர். இதன் சிகரமாகத்தான், 1999-இல்
கன்னியாகுமரியில் 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலையைக் கலைஞர் நிறுவினார்.
தமிழ்ப்புத்தாண்டினை தைத் திங்கள் முதல் நாளில் கொண்டாட ஆணையிட்டு, தைப்
பொங்கலுக்கு அடுத்த நாளினை திருவள்ளுவர் தினமாக நாம் பெருமிதத்தோடு கொண்டாடிட
ஆணையிட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள் அந்த அளவிற்கு திருவள்ளுவர் மீது மாறாத பற்று
கொண்டவர் தலைவர் கலைஞர். தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு புதிய
அமைச்சகமே கண்டவர் கலைஞர். அவர் வழியில் தளபதி அவர்கள் தமிழ்த்துறைக்கு தனியே
அமைச்சரை நியமித்தவர். உயிரைவிட மேலானது மொழி, மொழியின் மீதும் காதல்.
மொழிக்காகத்
தனித்துறை தனிஅமைச்சர் கண்டது திராவிட மாடல் அரசு. அய்யன் திருவள்ளுவரை மாணவர்கள்
உள்ளங்களில் இந்த போட்டிகளின் வாயிலாக பதிய வைத்துள்ளார் நமது முதல்வர்.
திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானர். திருவள்ளுவர். தமிழர்களுக்காக இருக்கக்கூடிய
உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்! திருவள்ளுவருக்கு சாயம்
பூச நினைக்கிற தீயவர்களை விரட்டியடிக்க கடமைப்பட்டிருகின்றோம். புதுமைப்பெண்,
தமிழ்புதல்வன் மற்றும் நான் முதல்வன் என முத்தான திட்டங்களை உயர்கல்விக்குக்கு
தந்து வரலாற்றில் சாதனைக்கு மேல் சாதனையாகப் படைத்துக் கொண்டிருக்கிறார் நமது
தலைவர் தளபதியார். மாணாக்கர்களின் உள்ளங்களை மனம் கவர்ந்தவர் நம் முதல்வர் தளபதி
அவர்கள், அயராது மக்களுக்காக உழைக்கின்ற நமது துணை முதலமைச்சர் இளைஞர்களின் எழுச்சி
நாயகனாக திகழ்கிறார்.
அயல்நாடு செல்லும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும்
எளிதாகவும் குறுகிய காலத்தில் தடையின்மைச் சான்று பெற ஏதுவாக, இணையவழியில்
நுழைவாயில் (Online Portal). கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்பாட்டுக்கு
வந்துள்ளது. இந்நவீன முயற்சியைத் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
"மக்கள் பணியே முதல் பணி* எனச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர்.
அவர் வழியில், அனைவருக்கும் அனைத்தும்" விரைந்து கிடைக்க உதவும் பல்வேறு "திராவிட
மாடல் திட்டங்களில்" இந்த "இணையவழி நுழைவாயில் திட்டமும்" ஒன்றாகும். பல ஆண்டுகளாக
ஆசிரியர்களுக்கு இடமாறுதலுக்கு பொது கலந்தாய்வு நடைபெறாமல் இருந்தது. அதனை தற்போது
நடத்தி பல நூறு ஆசிரியர்கள் சமீபத்தில் பயனடைந்துள்ளனர். கல்லூரிக் கல்வி
இயக்ககத்தின் கீழுள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு
ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை இன்று
வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
திராவிட மாடல் முதல்வர் அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களின் காவல் அரணாகக் கழக அரசு என்றும் நிற்கும் என்பதற்கு இது
சாட்சி. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தொடர்ந்து அறிவுத் திருவிழாக்கள்,
கருத்தரங்குகள், மாணாக்கர்களுக்குப் பல்வேறு போட்டிகள், முனைவர் பட்ட ஆய்வுக்கு
மாண்புமிகு முதலமைச்சர் உதவித்தொகைத் திட்டம் எனத் "திராவிட மாடல்" அரசின்
முன்னெடுப்புகளால், இந்தியாவில் உயர்கல்வியில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு
இன்று உருப்பெற்றுள்ளது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் மற்ற மாநிலங்கள் 28%
ஆனால், தமிழ்நாடு 48% தற்பொழுது பெற்று முதலிடம். ஆராய்ச்சிப் படிப்பில் தமிழ்நாடு
முதலிடம் பெண்கல்வியில் முதலிடம், இது பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி
இதற்கெல்லாம் நமது மாண்புமிகு முதலமைச்சருக்குத் தான், நாம் நன்றி சொல்ல வேண்டும்.
கல்லூரி கல்விக்கே நீட், க்யூட் நுழைவுத் தேர்வை மட்டுமே வைத்து மாணவர்கள் தரத்தை
முடிவு செய்வது என்பது முற்றிலும் நயவஞ்சகமானது. 3,5,8 வகுப்பு மணவர்களுக்கு பொதுத்
தேர்வு என்பது தேவையற்ற ஒன்று. இது இடைநிற்றலையே ஊக்குவிக்கும்.
தமிழ்நாடு அரசின்
இருமொழிக் கொள்கையையும் தற்போதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையே மாற்றக்கூடாது என்பது
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகும். நுழைவுத் தேர்வை எதிர்ப்பதில் இந்தியாவிலேயே
இன்று மட்டுமல்ல என்றுமே தமிழ்நாடு மட்டும் தான் முன்னணியில் நிற்கிறது. தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களின் முன்னெடுப்புக்கும், முயற்சிக்கும் பிற மாநிலங்களின்
முதல்வர்களும் இந்தியாவிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களும் ஆதரவு
தெரிவிக்கின்றன. இளநிலை கலை அறிவியல் பட்டத்திற்கு நான்கு ஆண்டு காலம் என்பதும்,
முதலாண்டு முடித்தால் சான்றிதழும், இரண்டாமாண்டு முடித்தால் பட்டயமும், மூன்று
ஆண்டு முடித்தால் பட்டமும். நான்கு ஆண்டு முடித்தால் சிறப்பு பட்டமும் என
விதிமுறைகள் வகுத்திருப்பது மாணவர்களின் இடைநிற்றலையே ஊக்குவிக்கும். முழுமையான
கல்வி பயில முற்றிலும் தடையாக இருக்கும். PUC இருந்த காலத்தில் ஒரு பாடத்தில்
தோல்வி அடைந்தால் அனைத்து பாடங்களையும் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே PUC பெறும்
நிலை இருந்தது.
இதனால் மேற்படிப்பிற்கு எவரும் சேர்க்கை பெறவில்லை. இதே நிலை தான்
இந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்பு கொண்டு வந்தால் ஏற்படும். இதனால் பட்டப் படிப்பில்
சேர்பவர்களின் எண்ணிக்கை குறையவே வழிவகுக்கும். கல்வியை ஒரு சாரார்க்கு மட்டுமே
கொண்டு சேர்க்கும் முயற்சியாகும். பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறிமுறைகளை ஏற்காத
பட்சத்தில் பட்டங்களை செல்லாததாக்கப்படும் மற்றும் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம்
இரத்து செய்யப்படும் என மிரட்டுவது கூட்டாட்சியின் தன்மையை சீர்குலைக்கும் சதி
செயலாகும். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. மக்களுக்காகவே,
உயர்கல்வியில் நமது மாணவர்கள் உலகப்புகழ் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன்,
பல புதிய புதிய திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இத்திட்டங்களைப் பயன்கொண்டு, நமது மாணவர்களும் மாணவிகளும் உயர்கல்வியில் முன்னேறிப்
பெரும் சாதனைகளைப் படைக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன். உயர்கல்வி உச்சம் அடைய இனி
உயர்கல்வியில் தமிழ்நாடு உலகத்துக்கே வழிகாட்டும் என்று உறுதியளிக்கின்றேன். இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
பின்னர், தேசிய
கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என ஒன்றிய கல்வி
அமைச்சர் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு. மும்மொழிக்
கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என்று Blackmail செய்வதை
தமிழர்கள் ஒரு நாளும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எங்கள் உரிமையை தான் கேட்கிறோம்
உங்கள் தனிச் சொத்தை கேட்பது போல் திமிராக பேசினால் தமிழர்களின் தனிக் குணத்தை
டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தெரிவித்துள்ளார்கள். ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சு அகம்பாவம் மற்றும் ஆணவத்தின்
உச்சம் ஒரு போதும் நிதிக்காக தமிழ்நாடு அரசும் மாண்புமிகு முதலமைச்சரும்
யாருக்காகவும் அடி பணிய மாட்டார்கள் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர்
அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி கல்வி இயக்கக ஆணையர் திருமதி
எ.சுந்தரவல்லி. இ.ஆ.ப., உயர்கல்வித் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.