வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 4.58 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 51
புதிய வாகனங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.
ஸ்டாலின் அவர்கள் இன்று (6.3.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைத் துறை சார்பில், வருவாய்த் துறையில் பணிபுரியும் தனித்துணை ஆட்சியர்
மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 4 கோடியே 57 இலட்சத்து 73 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை (Bolero) வழங்கி. கொடியசைத்து தொடங்கி
வைத்தார்.
வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக
விளங்குவதோடு, சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பட்டா
வழங்குதல் போன்ற சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின்
பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய
பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர்
துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும்
செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல்,
துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல். பொதுமக்கள் எளிதில் பயன்பெறும்
வகையில் இணையவழிச் சேவைகளை வழங்குதல். அலுவலகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள்
வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வரசு
பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 16
கோடியே 46 இலட்சத்து 57 ஆயிரத்து 742 ரூபாய் செலவில் 150 புதிய வாகனங்கள்
வழங்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறையில் பணிபுரியும் 4 தனித்துணை ஆட்சியர் (சமூக
பாதுகாப்பு திட்டம்) மற்றும் 47 வட்டாட்சியர்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் 51
புதிய வாகனங்கள் (Bolero BS-VI ரகம்) வழங்கிட 4 கோடியே 57 இலட்சத்து 73 ஆயிரம்
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்
இன்றையதினம் 25 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை உயர் அலுவலர்களின்
பயன்பாட்டிற்காக 51 புதிய வாகனங்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரு.நா. முருகானந்தம், இ.ஆ.ப. கூடுதல் தலைமைச்
செயலாளர் /வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் மு. சாய்குமார். இ.ஆ.ப., வருவாய் மற்றும்
பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. பெ. அமுதா, இ.ஆ.ப.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சிறப்புச் செயலாளர் திரு. சு. கணேஷ்,
இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (வருவாய் நிருவாகம்) முனைவர் ச. நடராஜன், இ.ஆ.ப., மற்றும்
அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.