உள்ளாட்சி இடைத்தேர்தல்: மே மாதம் நடத்த முடிவு!


'நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் காலியாக உள்ள, 448 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இடைத்தேர்தல், மே மாதம் நடத்தப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உயிரிழப்பு போன்ற காரணங்களால், 448 பதவியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, அப்பதவிகளுக்கான இடைத்தேர்தலை, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பு: 

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு, இடைக்கால தேர்தல்களை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் நான்கு வார்டு கவுன்சிலர்கள் உட்பட, 35 மாவட்டங்களில் உள்ள, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 133 பதவிகள் காலியாக உள்ளன. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 315 காலியிடங்கள் உள்ளன. இப்பதவிகளுக்கான தேர்தல், மே மாதம் நடத்துவதற்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தேசித்துள்ளது. இதற்காக, மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க, தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.