கொளுத்தும் வெயில் தாக்கத்தில் இருந்து... சருமத்தை பாதுகாப்பது எப்படி..?

கொளுத்தும் வெயில் தாக்கத்தில் இருந்து... சருமத்தை பாதுகாப்பது எப்படி..? 
வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. முகத்துக்கான பராமரிப்புக்கு என்று சொல்வதை விட சருமத்துக்கான பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், சருமம் வறட்சி ஆக ஆக முகத்தில் எரிச்சல் உண்டாகும். மேலும் பல பிரச்சினைகளையும் சந்திப்போம். வெயிலினால் உண்டாகும் பாதிப்பு ஒரு புறம் என்றால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைக்காமல் இன்னும் சருமம் பொலிவிழக்கக் கூடும். அதிகப்படியான உஷ்ணத்தை தாங்கக் கூடிய அளவுக்கு சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருந்தால் வெயிலில் சென்றாலும் கூட இந்த பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்பிக்க முடியும். அப்படி சருமத்திற்கு குளுமை தரக்கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று பார்க்கலாம். 

கற்றாழை

அழகிலும், ஆரோக்கியத்திலும் முக்கியத்துவமிக்க இது, இயற்கையின் அற்புத குணங்கள் நிரம்ப பெற்றது. கற்றாழையை சமீப வருடங்களாக கோடைக்கேற்ற பானமாக பயன்படுத்தி வருகிறார்கள். கற்றாழை எளிதில் கிடைக்க கூடியது மட்டுமின்றி விலை மலிவானதும் கூட. கற்றாழையின் சதை பகுதியை முகம், கழுத்து, கை, கால் பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவி எடுங்கள். அதிகப்படியான வெயிலையும் தாங்கும் வல்லமை கற்றாழைக்கு உண்டு என்பதோடு எரிச்சலையும் தராது. சருமத்தை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவும். 

வெள்ளரி 

வெள்ளரி சருமத்துக்கு மட்டுமல்ல கண்களுக்கும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள். வெள்ளரியை அரைத்து முகம், கழுத்து பகுதியில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை ரோஸ் வாட்டர் கொண்டு கழுவி எடுங்கள். அப்படியே வெள்ளரி துண்டு இரண்டை வட்டமாக நறுக்கி கண்கள் மீது வைத்து ரிலாக்ஸாக இருங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் முகத்தில் உஷ்ணத்தால் வரும் கட்டிகள் தடுக்கப்படும். பருக்கள் வராது. வியர்க்குரு பிரச்சினையும் இருக்காது. குளிப்பதற்கு முன் இதை உபயோகித்தால் முகத்துக்கு சோப் போடுவதை தவிர்த்துவிடுங்கள். வெயிலில் சென்றாலும் சருமம் குளிர்ச்சியாக இருக்கும். 

இளநீர் 

 உடல் உஷ்ணத்தை தவிர்க்கக்கூடிய இளநீர் கோடையில் முகத்துக்கும் குளிர்ச்சியை தரும். வெயிலில் சென்று திரும்பியதும் சுத்தமான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். பிறகு சுத்தமான பஞ்சில் இளநீரை நனைத்து முகத்தில் ஒற்றி எடுங்கள். குறைந்தது கால் மணி நேரம் இப்படி செய்து வந்தால் சரும துவாரங்களில் இருக்கும் அழுக்கு வெளியேறும். இளநீரில் இருக்கும் லாரிக் ஆசிட் சருமத்துக்கு தளர்வு தராது என்பதால் வயது முதிர்வும் கூட தள்ளி போகும். 

தயிர் 

தினமும் குளிப்பதற்கு முன்பு முகத்தில் தயிர் தடவி பத்து நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் சருமம் வெயிலால் நிறம் மாறாது, பொலிவாக இருக்கும். தயிர் முகத்தில் இருக்கும் அழுக்கை வெளியேற்றக்கூடியது. கெட்டித்தயிருடன் சந்தனத்தூளை கலந்து பேக் போன்றும் கலந்து முகத்துக்கு பயன்படுத்தலாம். அல்லது ஆரஞ்சு தோலை பொடித்து வைத்தும் கலந்து பயன்படுத்தலாம். கோடையிலும் முகத்தில் ஒரு தனி மினுமினுப்பு கிடைக்கும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தினால் கூட சருமத்தை பத்திரமாக பாதுகாக்கலாம். 

உள்புறமும் கவனிப்பு தேவை 

உடலில் நீர் வறட்சி குறைந்தால் உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல அந்த பாதிப்பு சருமத்துக்கும் இருக்கும். அதனால் கோடை காலத்தில் தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இந்த காலத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக எண்ணெய் கொண்ட பொருள்கள், நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சிகள் போன்றவையும் உள்ளுறுப்புகளை பாதிப்பதோடு சருமத்திற்கும் பங்கம் விளைவித்துவிடும். உஷ்ணக்கட்டிகளை மேலும் பெரி தாக்கவும் செய்யும். இவைகளை தவிர்த்துவிட்டு, பழச்சாறுகள், பழங்கள், மோர், இளநீர், பழ சாலட், நீர்ச்சத்துமிக்க காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.