மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் "அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதற்கென சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்." என அறிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, பார்வை 3இல் காண் செயல்முறைகளில், 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பள்ளி ஆண்டு விழா கொண்டாடிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ரூ.15 கோடி தொடக்கக் கல்வி துறையினையும் உள்ளடக்கி தொகை பகிர்ந்தளிக்கப்பட்டு விழாவிற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியும் மற்றும் ஒரு மாணவன் வீரப்பன் படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டை கையில் பிடித்துக் காட்டியதோடு, 2 மாணவர்கள் கட்சித் துண்டுகளை அணிந்து நடனம் ஆடியுள்ளதாகவும், அரசுப் பள்ளிகளில் இத்தகைய திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் புகார் மனு இவ்வலுகத்தில் பெறப்பட்டுள்ளது
எனவே, பள்ளி ஆண்டு விழாவில் மேற்காண் புகார்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகளில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதியின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்பதனை அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்து சுற்றறிக்கை அனுப்பி ஒப்புதல் பெற்று கோப்பில் பராமரித்திட, அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.