இளைஞர்கள் பலர் தங்களது கழுத்தில் புளூடூத் ஹெட்போன் மாட்டிக்கொண்டு எங்கு
சென்றாலும் அதனுடனேயே இருப்பதை பார்த்திருப்போம். இன்னும் சிலர் வேலை
பார்க்கும்போது, புத்தகம் படிக்கும்போது, சாலையில் நடக்கும்போது, பயணம்
செய்யும்போது என 24 மணி நேரமும் ஹெட்போன்களுடனேயே பொழுதை கழிக்கிறார்கள். இதனால்
பாதிப்பு உண்டாகும் என்பது சிலருக்கு தெரியும். அது தெரிந்தும் கூட அந்த பழக்கத்தை
தொடர்ந்து வருகிறார்கள். இதனால், காது கேளாமை ஏற்படும் என சுகாதாரத்துறை
எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு
சுகாதாரத்துறை சார்பாக, எச்சரிக்கை கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஹெட்போன்
அபாயம் மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
2 மணிநேரம்
அதன்படி, ஒரு நாளைக்கு, 2 மணி நேரத்திற்கு மேல் ஹெட்போன் உபயோகிக்கக் கூடாதாம்.
அதிலும், இந்த 2 மணி நேரம் தொடர்ந்து ஹெட்போன்கள் உபயோகிக் கக் கூடாது என
சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஒரு நாளில், தகுந்த இடைவேளை விட்டு, 2 மணி
நேரம் ஹெட்போன் உபயோகிக்கலாம், அதுவே உகந்தது என அந்த அமைச்சகம் கூறியிருக்கிறது.
பாதிப்பு
ஹெட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்திய பிறகு காது கேட்கும் திறனில் சில மாற்றங்கள்
ஏற்படுவதாக கண்டறிந்துள்னர். இப்படி ஏற்படும் மாற்றங்கள் அன்றாட வாழ்வில் எளிதில்
கவனிக்கப்படாது என்றும், இது நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்தலாம் என்றும்
அறிவுறுத்துகிறார்கள். வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் கலாசாரமும், இளைஞர்களின் அதிக
பாடல் கேட்கும் பழக்கங்களும் இதற்கு வழிவகுப்பதாக கூறும் மருத்துவர்கள், இந்த
பழக்கத்தை குறைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
பாதுகாப்பு
இப்போது இருக்கும் நிலைமையில், ஹெட்போன்களை தவிர்க்க முடியாது என்றாலும்
ஹெட்போன்கள் உபயோகிக்கும்போது, சில விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
எப்போதும் குறைவான ஒளி அளவில் ஹெட்போன் உபயோகிக்கவும். அதாவது 85 டெசிபல் என்கிற
பாதுகாப்பான அளவிற்கு மிகாமல், ஹெட்போன்களில் பாடல்களை ஒலிக்க செய்யலாம். வாங்கும்
போதே நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இவை உங்கள் காதுகளை
அதிக சத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவும். 15 நிமிடம் அல்லது 30 நிமிடத்திற்கு ஒரு
முறை ஹெட்போன்களை கழற்றி வைத்து விட்டு காதுகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
காதுகளில் வலி ஏற்பட்டால், உடனே ஹெட்போன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அவ்வப்போது
ஹெட் போன்களில் உள்ள இயர்பட்ஸை சுத்தம் செய்ய வேண்டும்.