நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், அரசு நிதியுதவி பள்ளியான கஸ்தூரிபாய் காந்தி கண்யா குருகுலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக சியாமளா பணியாற்றி வந்தார். இவரை பணி நிரவல் காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு மே 30-ந்தேதி காமேஸ்வரத்தில் உள்ள தூய செபாஸ்டியர் மேல்நிலைப்பள்ளிக்கு இடம் மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியை சியாமளா கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.முருகபாரதி, ‘‘கஸ்தூரிபாய் காந்தி கண்யா பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றிய ராஜலட்சுமி ஓய்வு பெற்றுவிட்டார். அதனால், தமிழ் ஆசிரியர் பதவி காலியாக உள்ளது. ஆசிரியை இல்லாமல் மாணவிகள் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால், அந்த இடத்துக்கு மனுதாரரை நியமிக்க வேண்டும்'' என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜராக வக்கீலும், அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியை பணியிடம் காலியாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரரை கஸ்தூரிபாய் காந்தி கண்யா குருகுலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மீண்டும் தமிழ் ஆசிரியையாக சியாமளாவை நியமிக்க உத்தரவிட்டார்.
அரசு நிதியுதவி பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்த ஆசிரியையை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
0
April 03, 2025
Tags