ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை அனைத்து
சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என மதுரை ஐகோர்ட்டு
உத்தரவிட்டது. ஆசிரியர் தகுதித்தேர்வு மதுரையை சேர்ந்த பஷீர், மதுரை ஐகோர்ட்டில்
தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிறுபான்மையினர் அரசு
உதவிபெறும் பள்ளி ஒன்றில், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து
இருந்தேன்.
ஆனால் இந்த பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்வில் தேர்ச்சி
பெற்றிருப்பது கட்டாயம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்து
உள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்
என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மேற்கண்ட ஆசிரியர்
பணியிட நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்
என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து,
மனுதாரருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தார்.
மேல்முறையீடு இந்த உத்தரவை எதிர்த்து, கல்வித்துறை சார்பில் மதுரை ஐகோர்ட்டில்
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு,
ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் நீதிபதிகள்
பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும்
ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம்
உள்ளது. அந்தவகையில் பள்ளி ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்கப்படுபவர்களுக்கு
தகுதியாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என தேசிய
ஆசிரியர் கல்வி கவுன்சில் நிர்ணயித்து உள்ளது. சிறுபான்மை நிறுவனங்களுக்கு
பொருந்தும் எனவே ஆசிரியர்களுக்கான இந்த கல்வித்தகுதி சிறுபான்மை கல்வி
நிறுவனங்கள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். அதன்படி இந்த வழக்கை
பொறுத்தவரை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனுதாரரின் கோரிக்கையை
ஏற்க இயலாது. மனுதாரருக்கு ஆசிரியர் பணியை வழங்க மறுத்த உத்தரவு செல்லுபடியாகும்.
இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.