பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப் பேரவையில் தெரிவித்தார். 
சட்டப் பேரவையில் நடந்த கல்வி மானியக் கோரிக்கை மீது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பதிலுரை: நம்முடைய மாணவர்களுக்கு பிறநாடுகளுடன் போட்டி செய்யும் அளவிற்கு கிட்டத்தட்ட 8,209 ஹைடெக் லேப் ரூ.519 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் மட்டும்தான் இருந்தது. ரூ.415 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வந்துவிட்டோம். லேப்டாப் என்று வரும்போது, கிட்டத்தட்ட 8.5 லட்சம் மாணவர்கள் பயன்படுவதைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள். இந்ததொழில் நுட்பத்தை கிட்டத்தட்ட 45 லட்சம் மாணவர்கள் பயன்படும் வகையில் நாங்கள் கொண்டுவந்துவிட்டோம்.தமிழ் கற்றல் சட்டம் தொடர்பாக, கடந்த ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் நிறைய வழக்குகளுக்கெல்லாம் சென்றார்கள். இப்போது, அதையெல்லாம் மீறி, 2015-2016 ம் ஆண்டிலிருந்து 1ம் வகுப்பில் கண்டிப்பாக தமிழ்ப் பாடம் இருக்க வேண்டும் என்றும், 2016-2017 ம் ஆண்டில் 1 மற்றும் 2 ம் வகுப்புகளில் கண்டிப்பாக தமிழ்ப் பாடம் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு, இன்றைக்கு 2025ம் ஆண்டில், 10ம் வகுப்பு வரை கண்டிப்பாக தமிழ் என்பதைத் தவிர்த்துவிட்டு, யாரும் படித்துவிட்டுவர முடியாது என்கிற அளவுக்கு அந்த சட்டத்தையும் நாங்கள் உள்ளீடு செய்திருக்கிறோம். தமிழாசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மானியக் கோரிக்கையில், கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏறத்தாழ பள்ளிக் கல்வித் துறைக்கென்று ஒதுக்கப்பட்ட நிதி, 10 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் கோடி, நமக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.46 ஆயிரத்து 767 கோடியையும் சேர்த்து, ஏறத்தாழ ரூ.2 லட்சத்து 603.43 கோடியை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒதுக்கித் தந்திருக்கிறார்கள், வெளிநாடு கல்விச் சுற்றுலா, பள்ளி ஆண்டு விழாக்கள், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள், சிறார் திரைப்படங்கள், செஸ் ஒலிம்பியாட், சாரணர், சாரணியர் இயக்கம், நம் நாட்டு, வெளிநாட்டைச் சார்ந்திருக்கின்றவர்களையும் அழைத்து புத்தகத் திருவிழாக்கள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறனறி வகுப்பறைகள், பல திறனறித் தேர்வுகள், ஒரு சிலருக்கு மட்டுமே ஐ.ஐ.டி. என்பதை மாற்றி, அனைவருக்கு ஐ.ஐ.டி. போன்ற திட்டங்கள் (மேசையைத் தட்டும் ஒலி) பாரதியார் பெயரில், அண்ணா பெயரில், பேராசிரியர் பெயரில் என ஒவ்வொருவர்களுடைய பெயர்களிலும் விருதுகளை வழங்குவதற்கு எங்களுடைய மாணவச் செல்வங்கள் ஆசிரியர் பெருமக்களிடம் பயிற்சிகளைப் பெற்றார்கள். நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தபோது, “சில திட்டங்கள் சில வாரங்கள் பயன்படும்; சில திட்டங்கள் சில மாதங்கள் பயன்படும்; சில திட்டங்கள் சில ஆண்டுகள் பயன்படும்; ஆனால், இந்த நான் முதல்வன் திட்டம் மட்டும் தலைமுறை தலைமுறையாய் பயன்படும்” என்று சொல்லிவிட்டு, (மேசையைத் தட்டும் ஒலி), “கால் நூற்றாண்டு கடந்து, அரை நூற்றாண்டு கடந்து, மு.க. ஸ்டாலின் என்கின்ற முதலமைச்சர் கொண்டு வந்த நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக நான் பயன் பெற்றேன் என்று யாராவது ஒருவர் சொன்னாலே போதும், (மேசையைத் தட்டும் ஒலி), அதுவே எனக்குப் பெருமை” என்று கூறி அவர் உரையாற்றினார். இந்த திட்டத்தின் மூலம் ஒரு உதவியாளர் பணியில் இருக்கும் சங்கர பாண்டியராஜ் என்கின்ற மாணவர் தற்போது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றார். அந்த மாணவனுடைய பெற்றோர்கள் தையல் கலைஞர்கள். மாதம் 10,000 ரூபாய் வருமானம் பெறக்கூடிய தையல் கலைஞர்களுடைய பிள்ளை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி செய்திருக்கிறார் என்றால், நாங்கள் எதற்காக தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று சொல்கிறோம் என்பது தெரிகிறதா? இவ்வாறு அமைச்சர் பேசினார். * அமைச்சருக்கு முதல்வர் பாராட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பதிலுரையின் போது சட்டப் பேரவை அமைதியானது. அவரின் பேச்சை ரசித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தையும் தெரிவித்தார். பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது பதிலுரையை அளித்தார். அமைச்சரின் பேச்சுக்கு இடையே பலத்த கைதட்டல்கள் விழுந்தன. சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அமைச்சர் ஆற்றிய பதிலுரை முதல்வரின் கவனத்தையும் பிற அமைச்சர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு துண்டுச் சீட்டின் மூலம் தனது பாராட்டுகளை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தெரிவித்தார். அந்த சீட்டில் இருந்த வாசகம்: ‘தம்பி, உனது பேச்சால் நான் மட்டும் அல்ல, சட்டமன்றமே அசந்து போய்விட்டது, வாழ்க! வாழ்த்துக்கள்’ என்று எழுதி கையொப்பமிட்டிருந்தார். 

1.25 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி 13 புதிய தொடக்கப் பள்ளிகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து சட்டப் பேரவையில் நேற்று பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது பதிலுரைக்கு பிறகு வெளியிட்ட அறிவிப்புகள்: 

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வியாண்டில் (2025-26) பள்ளி வேலை நேரத்தில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களின் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும். இத்திட்டம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். 

கலைத்திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் ‘‘கலைச்சிற்பி” என்ற தலைப்பில் சுமார் 400 மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு முகாம் நடத்தப்படும். 

சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் 2300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை மேன்மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 

அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வியை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிக்கு அருகிலும், நடைமுறையில் உள்ள விதிகளின்படி தொலைதூர கிராமப்பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். 

நவீன தமிழ் இலக்கியத்தின் அடையாளத்தையும் தமிழ் மொழியின் சிறப்புகளையும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் மகாகவி பாரதியார் மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட தொகுப்பு 25 இந்திய மற்றும் உலகமொழிகளில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.நிலை, கிராமப்புற அரசு கல்லூரி மாணவர்கள் வெளிநாடு பல்கலையில் ஒரு செமஸ்டர் பயில்வர்: அமைச்சர் கோவி.செழியன் தமிழ்நாடு சட்டப்பேரவயில் நேற்று உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கோவி.செழியன் 39 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: 

தமிழ் மொழி சிறப்பை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்காக கல்லூரிகளில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சிகள் ரூ.3 கோடியில் நடத்தப்படும். அரசுக் கல்லூரிகளில் கலைத் திருவிழா ரூ.5 கோடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும். 

கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தவும், உடல் நலனை காக்கவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து 164 அரசு கலை மற்றும் அறிவியல், 7 அரசு கல்வியியல், 11 அரசு பொறியியல், 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 252 கல்லூரிகளில் விளையாட்டு வசதிகள் ரூ.3.78 கோடியில் மேம்படுத்தப்படும் 

கல்லூரிகளுக்கு தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளை பரிந்துரை செய்திட ஏதுவாக, இணை இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் பாட வல்லுநர்களைக் கொண்ட பாடப்பிரிவு பரிசீலனைக் குழு அமைக்கப்படும். அரசுக் கல்லூரி மாணாக்கர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் கல்வி பயில்வதற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 

அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் விளிம்பு நிலை மற்றும் கிராமப்புற மாணாக்கர்களில் கல்வியில் சிறந்து விளங்கும் தலா 25 இறுதியாண்டு மாணாக்கர்கள் என மொத்தம் 50 மாணாக்கர்கள், அரசு உதவித்தொகையுடன் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் (செமஸ்டர்) கல்வி பயில்வதற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.