முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாற்றம்: உப்புமாவுக்கு பதில் சாம்பாருடன்
பொங்கல் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக சாம்பாருடன்
பொங்கல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டசபையில் சமூகநலத்துறை
மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கீதாஜீவன்
பேசியதாவது:-
காலை உணவு திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் கிராமப்புற, அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகள், நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன் அடைந்து
வருகின்றனர். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை
அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரித்து, குழந்தைகளின் ஆரோக்கியம்
மேம்பாடு அடைந்துள்ளது. காலை உணவுதிட்டத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம்
மட்டுமல்லாமல், வகுப்பறை ஈடுபாடும் அதிகரித்துள்ளது. அதன் பலனாக கல்வித்திறன்
அதிகரித்துள்ளது என மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை கூறுகிறது.
சாம்பாருடன் பொங்கல்
வரும் ஆண்டில் இத்திட்டத்தில் அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பாருடன் பொங்கல்
வழங்கப்படும். தற்போது இத்திட்டத்தில் 34,987 பள்ளிகளை சேர்ந்த 1 முதல் 5-ம்
வகுப்பு பயிலும் 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க
திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களும் பிற நாடுகளும்
இத்திட்டத்தினை பின்பற்றி செயல்படுத்தி வருகின்றார்கள். வரும் கல்வியாண்டு முதல்
நகரப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு
வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
மாவட்டந்தோறும் தோழி விடுதி
தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்த மாணவிகளுக்கு மாதம்
ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 95 ஆயிரம் மாணவிகள்
பயனடைந்துள்ளனர். இத்திட்டத்துக்காக இதுவரை ரூ.721 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 80 ஆயிரத்து 467 மாணவர்கள்
பயனடைந்து வருகின்றனர். பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில்
மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்க வேண்டுமென்ற நோக்கில் தமிழ்நாடு வெற்றிகரமாக
பயணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.