இரவு நேர வேலையும், உணவு பழக்க வழக்கமும்...
இபகல் பொழுதில் வேலை பார்த்துவிட்டு இரவில் தூங்கி ஓய்வு எடுக்கும் விதமாகத்தான் நமது உடல் அமைப்பு ருக்கிறது. இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சில வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், இரவு நேரங்களில் வேலையை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். இந்த மாற்றம் ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும். அதற்கேற்ப நிறைய இளைஞர்கள் இரவு நேர பணி சூழலுக்கு தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இரவு நேரம் பணியாற்றுபவர்கள், ஒருசில பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வது அவசியம். குறிப்பாக, உணவு பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்கவேண்டும். அதில் சில முக்கியமான, உணவு பழக்க மாற்றங்கள் இதோ...
இரவில் வேலைக்கு செல்வதற்கு முன்பாக எண்ணெய்யில் வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் செரிமான அமைப்பு ஓய்வெடுக்கும் நிலையில் இருக்கும் என்பதால் உணவு ஜீரணமாகுவது கடினமாகிவிடும். எண்ணெய் வகை உணவுகளை சாப்பிடுவது இரைப்பைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடல் பருமன் பிரச்சினையும் தோன்றும்.
இரவு நேரத்தில் பசி உணர்வு அதிகமாக இருக்கும். பசியை போக்குவதற்கு சமோசா, பர்கர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. வறுகடலை வகைகள், பாதாம், முந்திரி பருப்பு வகைகளை அளவோடு சாப்பிடுவது நல்லது. அவை உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். நொறுக்குத்தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் கட்டுப்படுத்தும்.
இரவு பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் டீ, காபி வகைகளை குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து பருகுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதற்கு பதிலாக நீர் மற்றும் ஜூஸ் வகைகள் பருகலாம்.
இரவு பணியில் இருப்பவர்கள் பழங்கள், காய்கறி, ஜூஸ் வகைகள், கோதுமை பிரெட்டுகள், உலர் திராட்சை, தானிய வகை சாலட்டுகள், வறுத்த தானியங்கள், பாலாடை கட்டி, குறைந்த கொழுப்பு கொண்ட பால், அவித்த முட்டை, மீன், கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சுகள், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.
இரவு வேலைக்கு செல்பவர்கள் இரவு உணவை, காலை உணவுபோல் கருதி சத்தாக சாப்பிட வேண்டும். இரவில் பசி எடுக்கக்கூடாது என்பதற்காக இரவு உணவை தாமதமாக உட்கொள்வது தவறு. இரவு 7.30 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
இரவில் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அரிசி சாதம், பருப்பு குழம்பு, தீயில் வேகவைக்கப்படும் கோழி இறைச்சி உள்ளிட்ட புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அவை தூக்க உணர்வில் இருந்து விடுபட வைக்கும்.
இரவில் விழித்திருக்கும்போது உட லில் வறட்சி தன்மை தோன்றும். அதை போக்க ஒரு டீஸ்பூன் நெய் சாப்பிடுவது நல்லது. அது வறட்சி தன்மையில் இருந்து உடலை சமநிலைப்படுத்த உதவும்.